தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

19 December 2018

17-12-2018 ஓய்வூதியர் தின நிகழ்வுகள்

          17-12-2018 அன்று, தூத்துக்குடி ARS மகாலில், தூத்துக்குடி மாவட்ட  AIBSNLPWA சார்பாக ஓய்வூதியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

          மாவட்டத் தலைவர் திரு எல்.தாமஸ் அவர்கள் தலைமை வகிக்க, காலை 10:30 மணிக்கு இறை வணக்கத்துடன் விழா இனிதே தொடங்கியது.



         கூட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் 45 தோழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டது பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.  மொத்தம் 140 ஓய்வூதியர்கள்  விழாவிற்கு வருகை தந்தனர்.

          திரு.எம்.பர்னபாஸ், மாவட்ட இணைச் செயலர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டத் துணைத் தலைவர் திரு எம்.ஜீவானந்தம், மாவட்டச் செயலர் திரு எஸ்.சுப்பையா,மற்றும் திரு என் திருமால், திரு. எம். முகம்மது பாருக், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

          70 அகவை கடந்த ஓய்வூதியர்கள்,  திரு எம்.குருசாமி,  திருமதி எஸ்.பாக்கியலட்சுமி,  திரு வி.சப்பாணி வீரன்,  திரு.எஸ்.சுப்புராயலு,  திரு.எஸ்.பூலன்,  திரு.ஐ.ஜான் தனசிங்,  திரு.பி.குருசாமி,  திரு.வி.செல்வராஜ் ஆகிய எண்மருக்கு மேடையில் பொன்னாடை போர்த்தப்பட்டு பெருமை சேர்க்கப் பட்டது.


          மாநில துணைச் செயலர் திரு என். அம்பிகாபதி அவர்கள் தமது சிறப்புரையில், நகாரா வழக்கின் தீர்ப்பைக் குறித்தும், அதன் தீர்ப்புநாளை நாம் ஓய்வூதியர் தினமாகக் கொண்டாடுவதன்  முக்கியத்துவத்தைக் குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும், நகாரா தீர்ப்பின் அடிப்படையில்தான் நாம் 2007ல் மாற்றத்துடன் கூடிய ஓம்வூதியம் பெற்றதையும், தொடர்ந்து 2017ல் நாம் 78.2 சதவிகித இணைப்புடன் கூடிய ஓய்வூதியத்தைப் பெறமுடிந்ததையும் விளக்கிப் பேசினார்.  மேலும் மருத்துவப் படி தொடர்ந்து கிடைக்க நமது தலைவர்கள், கடந்த அக்டோபர் மாதத்திலேயே “நாங்கள் வாழ்வதா, சாவதா?” என்ற கேள்வியை முன்னிறுத்தி அரசிடம் போராடி வருவதையும் குறிப்பிட்டார்.
          மருத்துவர் எஸ்.ரத்தினவேலு அவர்கள்,  உடல் குறைபாடுகள் என்னும் நோய் தீர்க்க உதவும் ‘தொடு சிகிச்சை’ குறித்த அருமையான விளக்கவுரையைத் தந்தார். மேலும், பஞ்சபூதங்களால் இயங்கும் இவ்வுடலினைப் பேணிக் காக்க உதவும் யோகா குறிப்புக்களையும் தந்து உரையாற்றினார். அத்துடன், செயல்முறை விளக்கங்களையும் ஒரு செய்முறையாளரை வைத்து மேடையிலேயே செய்து காண்பித்தது ஓய்வூதியர்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.



          மாவட்டப் பொருளாளர் திரு எஸ்.பால்சாமி அவர்கள் நன்றியுரை ஆற்ற,  விழா இனிதே நிறைவு பெற்றது!