நமது AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் ஏப்ரல் மாத மாதாந்திரக் கூட்டம், 13-04-2019 அன்று காலை 11:00 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை தந்தார். அதன்பின், நூறாண்டுகள் கழிந்தபின்பும் இந்திய சுதந்தரப் போரின் அழியாத கொடிய நினைவுகளுள் ஒன்றாக இருந்துவரும் ‘ 13 ஏப்ரல் 1919 அன்று நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையில்’ உயிரிழந்த ஆயிரமாயிரம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் பெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:
1. பிஎஸ்என்எல்லில் மருத்துவ பில்களுக்கான பணம் தற்போது வழங்கப்பட்டு வரும் விவரங்களையும், மருத்துவப்படி வழங்க ஏற்பாடுகள் நடைபெறும் நிலையினையும் மாவட்ட செயலர் எஸ்.சுப்பையா விரிவாக எடுத்துரைத்தார்.
2. வருகிற செப்டம்பர்-அக்டோபர் 2019ல் (புரட்டாசி மாதம்) தமிழ்மாநிலச் செயற்குழுக் கூட்டத்தினை, தூத்துக்குடி மாவட்டம் ஏற்று நடத்தத் தயாராகயிருப்பதாக 30-03-2019 அன்று நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறித்த விவாதத்தில் அனைவரும் சிறப்பாகப் பங்கேற்றனர். குறிப்பாக, அனைவரும் ரூ.500/- குறைந்தபட்ச நன்கொடை தந்து மாநிலச் செயற்குழு சிறப்பாக நடந்திட உதவ வேண்டும் என்ற முடிவை அனைவரும் ஆதரித்துப் பேசினர்.
3. வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தையும் சிறப்பாக நடத்துவதென்பது குறித்த விவாதமும் நடந்தேறியது.
மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி நன்றியுரை கூற, கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
கூட்டத்திற்கு 17 உறுப்பினர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.